பிகார் சட்டப்பேரவையில் மொத்தமாக 243 தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு அக்., 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பிஸ்கோமான் பவன் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காருக்குள் சுமார் 74 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநர் உட்பட இருவரை கைது செய்துனர்.
பின்னர், கார் ஓட்டுநர் ராஜூவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது முதலாளி சஞ்சய் குமார் சிங் சசாரத்திலிருந்து காலையில் பாட்னாவுக்கு வந்ததாகவும், பிஸ்காமான் வளாகத்திற்குள் காரை இரண்டு மணி நேரம் நிறுத்து வைக்குமாறு அவர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
எனவே, தொழிலதிபரான சஞ்சய் ஏதேனும் கட்சியில் பதவி பெறுவதற்காக இப்பணத்தை கொண்டு வந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினரும், வருமான வரித்துறையும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.