குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர்வது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. அப்போது அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும் ஆலோசனைகள் நடந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முதல் முதலில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அப்பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்ற மாநிலம் கேரளம்.
கேரள மாநிலத்தைப் பின்பற்றி பஞ்சாப் காங்கிரஸ் அரசும் அவ்வாறு தீர்மானத்தை நிறைவேற்றியது. தற்போது இப்பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல கட்சித் தலைவரின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் அகதிகளாக இந்தியா வந்த மதத்துன்புறுத்தலுக்கு உள்ளான அந்நாட்டின் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - கேரளாவை பின் தொடர்ந்த பஞ்சாப்