ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிறுவனம் சார்பில் பல கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணை இத்தாலியில் நடைபெறும்நிலையில், இந்தியாவில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ராஜிவ் செக்சேனா கைது செய்யப்பட்டார். மேலும் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கிலும் சி.பி.ஐ. அதிகாரிகளால், கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 30 மில்லியன் யூரோக்களை இவர் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதற்கிடையே, ராஜிவ் செக்சேனா அப்ரூவராக மாற டெல்லி நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதியளித்தது. இந்நிலையில், இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் சுஷன் மோகன் குப்தா-வை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.