இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிறுவனம் சார்பில் பல கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணை இத்தாலியில் நடைபெறும் நிலையில், இந்தியாவில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் சகோதரி மகனான ரதுல் புரியின் முன் ஜாமினை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கின் ஆதாரங்களை கலைப்பதற்கு தேவையான அதிகாரம் இருப்பதால், அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பு டெல்லி உயர் நீதிமன்றம் வாதத்தை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.