பிகார் மாநிலத்தின் முசாபர்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் நாட்டின் சில பகுதிகளிலும் லிச்சி பழம் வளர்ந்துவரும் இடங்களில் மூளைக்காய்ச்சல் நோய்கள் பரவிவருவதாக வந்த அறிக்கையை அடுத்து, ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் லிச்சி பழத்தில் இந்நோய் பரவுவதற்கான காரணிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்தப் பழங்களில் நோய்கள் பரவுவதற்கான காரணிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அம்மாநிலத்தின் சுகாதாரம், குடும்பநலத் துறை அலுவலர்கள் உணவு ஆணையரிடம் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட லிச்சி பழத்தினை ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.
முன்னதாக, பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, மூளைக்காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழு, 'இரவில் வெறும் வயிற்றில் துாங்குவது, உடல் வறட்சியால் ஏற்படும் நீரிழப்பு, வெறும் வயிற்றில் லிச்சி பழத்தினை சாப்பிடுவது உள்ளிட்டவை நோய்க்கான காரணங்களாக உள்ளது' என தெரிவித்துள்ளது.
மூளைக்காய்ச்சல் அறிகுறிகள்:
மூளைக்காய்ச்சல் ஒரு வைரஸ் நோயாகும். லேசான காய்ச்சல், தலைவலி, வலிப்பு, அதிக காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோயால் இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒன்று முதல் 10 வயதுடைய குழந்தைகள் ஆகும்.