எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதை காரணம்காட்டி, டெல்லியின் மிகவும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் ஒன்றான லோதி சாலையில் உள்ள லுடியென்ஸின் பங்களாவிலிருந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை வெளியேறுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவுறுத்தியது. மத்திய பாஜக அரசு, அரசியல் காரணங்களுக்காக பிரியங்கா காந்தியை பழிவாங்குகிறது என கடும் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டில் நடைவெறவுள்ள உத்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முகமாக மாறப் போகும் பிரியங்கா காந்தியின் புதிய அரசியல் தளமாக லக்னோவை மாற்ற காங்கிரஸ் கட்சியினர் முடிவெடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அத்தையும், மறைந்த காங்கிரஸ் தலைவருமான ஷீலா கவுலுக்கு சொந்தமான கோகலே மார்க்கில் அமைந்துள்ள ஒரு பங்களாவுக்கு பிரியங்கா இடம்பெயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்காவின் இந்த இடமாற்றம் அவரை 'இந்திரா 2.0' என்று அழைக்கும் சூழலை உருவாக்கி உள்ளது.
இது குறித்து பேசிய உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, "கடந்த ஆண்டு நவம்பரில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மாற்றியமைத்து, அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் சி.ஆர்.பி.எஃப் இசட் + பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
பிரியங்கா காந்தி அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதும், இந்த பழிவாங்கும் செயலை மத்திய அரசு தொடங்கியது. மேலும், அவர்கள் தங்கியிருந்த பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தியது.
பிரியங்கா காந்தியின் மக்கள் 'பணி' குறித்து மத்திய அரசு அச்சப்படுகிறது. அதனால், அரசு இத்தகைய வேலைகளை செய்து வருகிறது. பிரியங்கா காந்தி தொடர்ந்து பொது நலன் தொடர்பான பிரச்னைகளில் மக்கள் பிரதிநிதியாக இந்த அடாவடித்தனமான மத்திய, மாநில அரசுகளை பார்த்து கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்.
பிரியங்காவை டெல்லி பங்களாவிருந்து காலி செய்ய வைத்த அரசால், உத்தரப் பிரதேச மக்களின் இதயத்திலிருந்து அவரை ஒருபோதும் அகற்ற முடியாது. நரேந்திர மோடி மற்றும் யோகி இருவருக்கும் எதிரான அறப் போராட்டம் இனி வீரியமடையும்" என தெரிவித்தார்.