உத்தரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு சிலர் நிர்பந்தித்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தால் நடந்த கலவரத்தில் 10பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 28பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிற ஊர் தலைவர் யக்யா தத், அவரது சகோதரர் உள்பட 29பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ உள்ளிட்ட நான்கு அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில(கிழக்கு) பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். இதற்காக அவர் நேற்று வாரணாசி சென்றார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சோன்பத்ராவுக்கு புறப்பட்டார். ஆனால் அவரை வாரணாசி - மிர்சாப்பூர் எல்லையில் உள்ள நாராயணபூர் என்ற இடத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையடுத்து அவர் அங்கேயே நடுரோட்டில் அமர்ந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சுற்றிலும் காங்கிரஸ் தொண்டர்களும், பாதுகாப்பு படையினரும் சூழ்ந்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. பின்னர் காவல்துறையினர் அருகில் உள்ள சுனார் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர். அங்கு பிரியங்கா காந்தியை காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்காமல் திரும்பிச் செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.