பெங்களுரூ எலங்கா பகுதியில் விமான படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏரோ இந்தியா என்ற பெயரில் விமான கண்காட்சி நடத்தப்படும்.
அதில் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் கலந்துகொள்ளும். இந்த நிகழ்வையொட்டி வானில் சாகச நிகழ்ச்சிகளும் செய்து காட்டப்படும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடக்கவுள்ள ஏரோ இந்தியா 2021 நிகழ்வின் வலைதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செப்.11) வெளியிட்டுள்ளார்.
ஏரோ இந்தியா 2021 நிகழ்வு பற்றி இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடந்த பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து துணைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில், ''ஏரோ இந்தியா 2021 பற்றி இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்த பாதுகாப்பு உபகரணங்கள் துணைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ஏரோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது'' என பதிவிடப்பட்டுள்ளது.
ஏரோ இந்தியாவின் 12ஆவது நிகழ்வு பெங்களுரூவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. அதில் 61 விமானங்கள் பங்கேற்றிருந்தன. இதற்காக விமான போக்குவரத்து அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகள், தொழில்துறை சங்கங்கள் ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து பல கருத்தரங்களை நடத்தினர்.
கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கண்காட்சி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே சில வாரங்களுக்கு முன்னதாக ஏரோ இந்தியா கண்காட்சி நடக்கவுள்ள தேதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்தது.
ஐந்து நாள்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில், முதல் மூன்று நாள்களுக்கு மக்களுக்கு அனுமதியில்லை எனவும், கடைசி இரண்டு நாள்களில் மக்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மதிப்பெண் குறித்த அழுத்தம் நீங்க வேண்டும்' - பிரதமர் மோடி விருப்பம்