புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு மூலம் கிடைக்க வேண்டிய உதவித் தொகைகளைப் பெற முடியாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
புதுச்சேரியில் தற்போது சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ இலவச அரிசியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 1.67 லட்சம் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது பெறப்படும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 கிலோ அரிசியும், 2 கிலோ துவரம் பருப்பும் அரசு வழங்க வேண்டும்.
பேரிடர் பகுதியாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டுள்ளதால், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அரசு கட்டாயம் வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு 10 கோடி செலவாகும். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மஞ்சள், சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்கள் என மக்களைப் பிரித்து உதவிகள் செய்வது சரியானது அல்ல என்பதை, அரசு உணர்ந்து மஞ்சள் நிற அட்டை வைத்துள்ள மக்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும். இவற்றை நான் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி... சைக்கிளில் புதுச்சேரிக்கு பயணம் - மனைவி மீதான கணவனின் காதல்