கோவிட்-19 தொற்றுநோயால், விமானத்துறையில் ஏற்பட்ட இழப்புகளை மேற்கோள் காட்டி, பணம் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிக்க இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (Airports Authority of India - AAI), அதானி குழுமம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
அதானி குழுமத்தின் கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாக விமான நிலைய ஆணையத்தின் மூத்த அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையம், தனது ஆறு விமான நிலையங்களைக் கடந்த 2019ஆம் ஆண்டில் ஏலம் விடுப்பதாக அறிவித்தபோது, அதானி குழுமம் ஆறு விமான நிலையங்களையும் அதிக விலைக்கு ஏலம் எடுத்தது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, 2020 செப்டம்பர் வரை, இந்திய விமான உள்கட்டமைப்புத்துறை மிகுந்த பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்றும், இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தர மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ (Information and Credit Rating Agency of India) தெரிவித்திருந்தது.
ஐ.சி.ஆர்.ஏ அறிக்கையின்படி, '2021 நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து நெருக்கடியான சூழலில் இருக்கும். 2020ஆம் ஆண்டில் 45-50% எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்குப் பிறகே இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையைக் காரணம் காட்டி, அதானி குழுமம் ஏலத்தொகை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளது.
நாட்டில் உள்ள மேலும் ஆறு விமான நிலையங்களுக்கான ஏல செயல்முறை விரைவில் தொடங்கப்படும் என்றும்; மொத்தம் 12 விமான நிலையங்களில் தனியார் துறையின் கூடுதல் முதலீடு சுமார் 13,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.