மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவம் சுக்லா. இவர் அப்பகுதியிலுள்ள பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)-யில் நிர்வாகியாக உள்ளார்.
மகாத்மா காந்தியை கொன்ற நதூராம் கோட்சேவின் 111ஆவது பிறந்தநாளை (மே 19) முன்னிட்டு, கடந்த சில நாள்களுக்கு முன் சிவம் சுக்லா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்குப் பதில் நாதூராம் கோட்சேவின் புகைப்படத்தை கிராபிக்ஸ் முறையில் இணைத்துப் பதிவிட்டிருந்தார்.
மேலும் தனது பதிவில், நாதுராம் கோட்சேவை தனது ஹீரோ என்று குறிப்பிட்டுள்ள அவர், கோட்சே நீடூழி வாழ்க என்றும், இந்திய தேசத்தைக் காத்தவர் கோட்சே என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறையிடம் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் புகாரளித்துள்ளது. காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.எஸ். பெல்வன்ஷி, "இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது சைபர் பரிவு உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சிவம் சுக்லாவின் வீட்டிற்குச் சென்றோம். ஆனால் அவர் இப்போது தலைமறைவாகவுள்ளார்" என்றார்.
மேலும், தங்கள் அமைப்பைத் தேவையின்றி இந்தப் பிரச்னையில் இழுப்பதாக இந்திய தேசிய மாணவர் சங்கம் மீது ஏபிவிபி பதிலுக்குப் புகார் அளித்துள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களின் கெடுபிடியால் விமான சேவை மந்தம்!