தப்லீக் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு டெல்லி நிஜாமுதீனில் மதம் சார்ந்த கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து தங்கள் மாநிலத்துக்கு சென்றவர்களுக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து ஜாமியத் உலேமா இ ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி கூறுகையில், "கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் வளர்ந்த நாடுகளே தவித்துவருகின்றன. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இஸ்லாமியர்கள் மசூதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீட்டிலேயே பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். இந்துக்கள், இஸ்லாமியர்கள் விதிகளை பின்பற்றி கரோனாவுக்கு எதிராக போரை தொடுக்க வேண்டும்" என்றார்.