பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆனந்த் பாஸ்கர், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாக கொண்டாட வேண்டும்.
இந்த தினத்தை ஏற்கனவே ஐநா அமைப்பு உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது. இதை நமது தேசிய தினமாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இத்தினத்தை கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏவுகணை மனிதன் கனவு கண்டது போல நம்முடைய மாணவர்களிடையே ஒரு பொறியை பற்ற வைக்க இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்.
அப்துல் கலாம் மறைந்த நாளிலிருந்து கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15ஆம் தேதியை தாங்கள் சொந்த விருப்பத்திலேயே கொண்டாடி வருகின்றன. ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாகவும், ஆகஸ்ட் 7ஆம் தேதியை கைத்தறி தினமாகவும் கொண்டாடுவதைப்போல அப்துல்கலாம் பிறந்த தினத்தையும் அதே உற்சாகத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.