தெற்கு காஷ்மீரில் உள்ள 162 பட்டாலியன் பிராந்திய ராணுவத்தில் சிப்பாயாக இருப்பவர் ரைபிள்மேன் ஷாகிர் மன்சூர். இவர் பெருநாள் (ஈத் திருநாள்) விடுமுறையை தன் குடும்பத்தினரோடு கழித்துவிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி மீண்டும் பணியில் சேர காஷ்மீர் வந்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், அவர் தனது முகாமை அடையாத காரணத்தால் அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் நிலவியது. இதையடுத்து, அவரை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடத் தொடங்கினர்.
இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 7) ஷோபியான் மாவட்டத்தை அடுத்த லண்டூரா கிராமத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் மாயமான சிப்பாயின் உடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுவரை, எந்தவொரு பிரிவினைவாத அமைப்புகளோ, குழுக்களோ இந்த கடத்தலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்பதால் தொடர்ந்து சந்தேகம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பு படையினர் சிப்பாயைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.