டெல்லியில் வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடைசி கட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மக்களின் பாதுகாவலராகச் சித்தரித்து விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை வெளியிட்டு ஆத் ஆத்மி கட்சி நூதனப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் 'ஐந்து வருடங்கள் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் இருந்தால் டெல்லி மேலும் சிறப்புறும்' எனும் பொருள்படும்படியான விளம்பரப் பலகைகள் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.
இவற்றில் கெஜ்ரிவால் வெற்றிக் களிப்பில் தன் கைகளைத் தூக்கியுள்ள புகைப்படம், முதியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் புகைப்படம், மாணவர்களின் மத்தியில் மக்கள் நாயகனாக இருக்கும்படியான புகைப்படம் உள்ளிட்டவை இடம்பெற்று மக்களைக் கவர்ந்திழுக்கும்படியாக இந்த விளம்பரப் பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
'முன்னதாக ஐந்து வருடங்கள் அற்புதமாகச் செலவழிக்கப்பட்டது. அப்படியே தொடருங்கள் கெஜ்ரிவால்' எனும் பொருள்படியான இந்தி வாசகங்களைக் கொண்டு அக்கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பரப்புரையில் கெஜ்ரிவால் தன்னை ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினரைப்போலவே முன்னிறுத்தி மக்களிடம் கலந்துரையாடிவருகிறார். வருகிற நாள்களில் 50 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து பரபுரையில் ஈடுபடவுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆத் ஆத்மி கட்சியினர், தங்கள் வாக்குறுதிகள் அடங்கிய தகவல் அட்டைகளை எடுத்துச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஷாஹீன் பாக்கில் ஓருத்தன் கூட இருக்க மாட்டான் - பர்வேஷ் வர்மா சூளுரை