டெல்லி சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பரப்புரை உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைப்பெறுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான கோபால் ராய் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜன் சம்வாத் (மக்களை தொடர்புக் கொண்டு பேசுதல்) என்ற பெயரில் பரப்புரை பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக 14 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களுடன் எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவார்கள்.
ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒரு நாளைக்கு 5 மையங்களில் பொதுமக்களை தொடர்புக்கொண்டு பேசுவார்கள். இந்த பணிகள் நவம்பர் 18ஆம் தேதி (அதாவது இன்று) தொடங்கி, வருகிற டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நிறைவடையும்” என்றார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் விதமாக பா.ஜனதாவும் ஆயத்தமாகி வருகிறது. அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜாஜூ, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷவர்தன் மற்றும் ஹர்தீப் சிங் பூரி, மீனாட்சி லேகி, மனோஜ் திவாரி, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், விஜய் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற (2020) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ள காங்கிரஸ்