கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் இந்த அத்துமீறலுக்கு இந்தியாவின் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே சீன விவகாரம் பற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து திமுக, அதிமுக கட்சிகள் பங்கேற்கின்றன. தேசிய அளவில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்துகொள்ள உள்ளன. நாடாளுமன்றத்தில் போதிய உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமருடனான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து அக்கட்சியின் சஞ்சய் சிங் பேசுகையில், "நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது.
திட்டமிட்டே பல கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க : 52 சீன செயலிகள் முடக்கப்படும் - இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை!