டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள துர்கா விஹார் பகுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி 52 வயதான மருத்துவர் ராஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலை குறிப்பில், “எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால், அவரின் குடும்பத்தினர் தன்னை மிரட்டியதாக” குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., பிரகாஷ் ஜர்வால் மீது பணம் பறித்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலின் தந்தை மற்றும் சகோதர்களிடம் வியாழக்கிழமை (மே7) காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள பிரகாஷ் ஜர்வால், “தான் ஒரு நிரபராதி, எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக” கூறியுள்ளார்.
ராஜேந்திர சிங்கின் தற்கொலை குறித்த அவரது மகன் ஹேமந்த் கூறுகையில்,“ தனது தந்தை துர்கா விஹாரில் மருத்துவ கிளினிக் நடத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு முதல் டெல்லி குடிநீர் வாரியத்துடன் நீர் வழங்கல் தொழிலில் ஈடுபட்டுவந்தார். அவரது தற்கொலை கடிதத்தில் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்” என கூறியுள்ளார்.
ராஜேந்திர சிங் அவரது வீட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி, அதிகாலை 6 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரகாஷ் ஜர்வால், தியோல் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: நால்வருக்கு வலைவீச்சு!