அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி குறித்து பேசிய டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி அரசு சுமார் 20 ஆயிரம் புதிய வகுப்பறைகளைக் கட்டியுள்ளதாகக் கூறினார்.
இது குறித்து அவர் விரிவாகத் தெரிவித்ததாவது:
மக்கள் எந்த மாதிரியான ஆட்சிமுறை சிறந்தது என்பதை தீர்மானிக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் ஆம் ஆத்மி அரசு டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 20 ஆயிரம் புதிய வகுப்பறைகளைக் கட்டியுள்ளது. அதாவது புதிதாக 500 பள்ளிகளைத் திறக்கும் அளவிற்கு வகுப்பறைகளைக் கட்டியுள்ளோம்.
முன்பெல்லாம் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் பயிலும் மாணவரால் இந்தி மொழியை சரியாகப் படிக்க இயலாது. தற்போது நிலைமை மாற்றப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகவே 20 ஆயிரம் புதிய வகுப்பறைகளைக் கட்டிய ஆம் ஆத்மி அரசின் மாதிரியா? அல்லது ஒன்பது ஆண்டு ஆட்சிக்காலத்தில் 141 பள்ளிகளை மூடிய பாஜக அரசின் மாதிரியா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லியில் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க: சசிகலா குறித்து தர்பாரில் காட்சி - ரஜினி, ஏ.ஆர். முருகதாஸ் மன்னிப்புக் கேட்கவேண்டும்!