உத்தரகாண்ட மாநிலம், டேராடூன் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் அனில் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. இந்த கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர், ரூ.65ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி சென்றார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கடையில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், அதில் முந்தைய குற்றவாளிகள் பெயரில் அந்த உருவம் இல்லாதது காவல்துறையினரை குழப்பமடை செய்தது. இந்நிலையில் திருடன் சேதப்படுத்திய மேற்கூரையை அனில் சுத்தம் செய்த போது, திருடன் விட்டுச் சென்ற மணிபர்ஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை காவல்துறையிடம் அவர் ஒப்படைத்தார். பின்பு அந்த பர்சை சோதனை செய்த போது, திருடனின் ஆதார்கார்டு இருப்பது தெரியவந்தது. அதை வைத்து காவல்துறையினர் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருட சென்ற இடத்தில் விட்டு வந்த ஆதார்கார்டு மூலம் திருடன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.