வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலா அருகே அமைந்துள்ள நகரம் பட்டாலா. இந்த நகரத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க் கிழமையன்று தனது குழந்தையின் சிசிக்சைக்காக அகர்தலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். சிகிச்கைக்கு பிறகு மாலையில் வீடு திரும்புகையில் அவர் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
அப்போது சிறிது நேரம் கழித்து அந்த ஆட்டோவின் ஓட்டுநர் மாற்றுப்பாதையில் சென்றுள்ளார். இது குறித்து அந்த பெண் கேள்வியெழுப்பியபோது, தான் ஒருவரிடம் பணம் வாங்க வேண்டும் என்றும் அதை வாங்கியதும் உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்றும் அந்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின் அந்த ஆட்டோவில் மூன்று நபர்கள் ஏறியுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை அருகிலிருந்த நர்சிங்கரா பகுதிக்கு கடத்திச் சென்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட பத்து பேர் இரவு முழுவதும் அப்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை காப்பாற்றும்படி கதறியுள்ளார். எனினும் அப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அப்பெண்ணின் சத்தம் யாருக்கும் கேட்காமல் போனது.
இதைத் தொடர்ந்து அந்த கும்பல், அப்பெண்ணை சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். சாலையில் கிடந்த அப்பெண்ணை மீட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்திற்கு சென்றபோது, வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை காவல் துறை மறுத்தது.

இந்த சம்பவம் திரிபுரா மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் பிப்லப் குமார், சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்குமாறு காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டார். பின்னர் இது தொடர்பாக ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் எஞ்சியுள்ள குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அகர்தலா நகருக்கு வெளியே பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் மத்திய அரசு, அந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இன்னும் அதிகப்படியான தண்டனை விதித்தால் இதுபோன்ற கொடூர குற்றச்சம்பவங்கள் முற்றிலுமாக குறையும் என்பதே ஒரு சாமானியனின் கோரிக்கையாக உள்ளது.