ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நடைபெறவிருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருப்பினும், பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு இப்போதிருந்தே வகுப்புகளை எடுத்துவருகின்றன.
அந்தவகையில், கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா சிர்சி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் ஹெக்டே. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் சமூகப் பணி தொடர்பான பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.
இந்நிலையில், இவருக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்பு எடுக்க இவரின் ஆசிரியர் இவரை செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், நெட்வொர்க் பிரச்னை காரணமாக இவரின் செல்ஃபோனுக்கு சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் ஸ்ரீராம் தவித்துள்ளார்.
இதனையடுத்து ’வம்சம்’ படத்தில் வரும் கஞ்சா கருப்பின் காமெடியைப் போல் செல்ஃபோன் சிக்னலுக்காக இவரும் மரத்தில் ஏறியுள்ளார். அங்கு அவருக்கு சிக்னல் தெளிவாக கிடைத்ததால் ஆன்லைன் வகுப்பு முடியும்வரை மரத்திலேயே இருந்து, பாடத்தை கவனித்துள்ளார்.
இவர் இருக்கும் பகுதியில் பெரும்பாலான இடங்களில் செல்போன் சிக்கல் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், கல்லூரிகள் கிராமப்புற மாணவர்களுக்கு தற்போதிருந்தே ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுப்பதால் சிரமமாக உள்ளதாக மாணவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தனியார் கல்வி நிறுவனம்!