2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் செய்ததாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆ.ராசா குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மை என்றும் தோற்காது என்று ஆ.ராசா சூளுரைத்தார். தற்போது 2ஜி அலைக்கற்றையை வைத்து அவர் மீது பழிக்கப்பட்ட வார்த்தைகள் பொய்த்து போனது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.ஆனார் ஆ.ராசா.
பிரதமர் மோடி தலைமையிலான 17வது நாடாளுமன்றம் கூட்டத்தொடர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூடியது. ஆளும் பாஜக கூட்டணி எம்பிக்கள், காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் தினமும் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேசி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகிறார்கள்.
அவையில் சபாநாயகர் இல்லாத நேரங்களில் உறுப்பினர்களில் ஒருவரே அவையை நடத்துவது வழக்கம். அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா இன்று மாலை 5 மணிக்கு மக்களவையை ஆ.ராசா வழிநடத்தினார். அப்போது, கேரளாவின் மாவேலிக்கரை எம்.பி. சுரேஷ் கொடிகுனில் தங்களது ஊர் பிரச்னை குறித்து பேசினார். தற்போது ஆ.ராசாவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மூன்று முறைகளுக்கு மேல் மக்களவை உறுப்பினர்களாக பதவி வகிப்பவர்கள் அவையை வழிநடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.