கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து ரயில்களும் இயக்கப்படவில்லை. மாறாக, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு ரயில்கள் மட்டும்தான் தற்போது, நாடு முழுவதும் இயங்கப்படுகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த கரோனா காலத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் முறைக்கேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறுகையில், நாடு முழுவதும் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஐந்து முக்கிய குற்றவாளிகள் உள்பட 994 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், நேற்று (செப். 8) ஆன்லைனில் சட்டவிரோத ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்பட்டபோது, 87.70 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அதில் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் உள்பட 239 கைது செய்யப்பட்டனர்.
அதுமட்டுமின்றி மோசடி கும்பலின் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டு அதன் அமைப்பு அழிக்கப்பட்டு 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தேசிய அளவிலான நடவடிக்கையாகும். அவர்கள் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுள்ளனர். இதனால் அவர்களின் பணப் பரிமாற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் ரேக் மாங்கோ செயலியை உருவாக்கிய வெப் டெவலப்பர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து ரயில் டிக்கெட்டுகளை வாங்குவதை மக்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவும், அப்படி முறைக்கேடாக வாங்கப்பட்ட டிக்கெட்டுகளில் பயணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது - மதுரைக் கிளை