கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதியன்று தொடங்கியது.
கூட்டத்தொடரின் ஆறாம் நாளான இன்று (செப்டம்பர் 19) மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன், "ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை பயணத்தின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்த வேண்டும்" எனக் கோரினார்.
இதற்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களைத் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மே 1ஆம் தேதிமுதல் இயங்கத் தொடங்கின. மே 1ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நான்காயிரத்து 621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் ஆறு கோடியே 31 லட்சத்து ஒன்பதாயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் மொத்தம் ரூ.433 கோடி வருவாய் மாநில அரசுகள், அவற்றின் பிரதிநிதிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் காவல் துறையினர் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வரையில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொண்டவர்களில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 97 மரணங்களில் 87 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. 51 பேரின் பரிசோதனை அறிக்கைகள் அந்தந்த மாநில காவல் துறையினரிடமிருந்து இதுவரை பெறப்பட்டுள்ளன. இதய நோய், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு, நாள்பட்ட இதய நோய்கள், நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்களே அவர்களின் இறப்புக்கான காரணமென சொல்லப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஊரடங்கு காலத்தில் இறந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த தொழிலாளர் அமைச்சகத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தரவுகள் எதுவும் இல்லை என பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை அளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.