கோவிட்-19 வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது வருகிற 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் கோவிட்-19 வைரஸின் வீரியம் குறையவில்லை.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கும்படி தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது தொடர்பாக மக்களின் கருத்துகளை அறியும் வண்ணம் ஆன்லைன் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று கருத்து கணிப்பை நடத்தியது.
இதில் கருத்து தெரிவித்த 40 ஆயிரம் பேரில் 88 விழுக்காடு மக்கள் ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சமூக தூரத்தை கடைப்பிடிப்பதற்கும், கோவிட்-19 பரவலை தடுப்பதற்கும் ஊரடங்கு உத்தரவு சிறந்த வழி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஒடிசா மாநில அரசு, ஊரடங்கு காலத்தை ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிக்க முடிவெடுத்துள்ளது. ஆகையால் அம்மாநிலத்தில் கல்வி நிறுவனங்களும் ஜூன் 17ஆம் தேதிவரை மூடப்பட உள்ளது.