டெல்லி: மக்களவையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
கேள்விகள்
(அ) வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏராளமான தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் சிக்கியுள்ளனர்; அவர்களில் எத்தனை பேர் இந்தியா வந்துள்ளனர்?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்; நாடு வாரியாக?
(இ) சரியான நேரத்தில் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பதில்கள்
அதில், கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டம் மே 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. செப்டம்பர் 10ஆம் தேதிவரை 13 லட்சத்து 74ஆயிரத்து 237 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் விமானம், கப்பல், தரை வழியாக தாயகம் வந்துள்ளனர்.
இந்த 13 லட்சம் பேரில், 3 லட்சத்து 8 ஆயிரத்து 99 பேர் வெளிநாடுகளில் வேலைபார்த்துக் கொண்டிருப்போர். இவர்கள் அனைவரும் வேலையை இழக்கவில்லை, பலர் இழந்துள்ளனர். ஆனால், கரோனா சூழல் காரணமாகவே தாயகம் வந்துள்ளனர்.
வளைகுடா மற்றும் கிழக்கு ஆசியாவிலிருந்து தமிழ்நாடு திரும்புவதற்கான / பதிவு செய்துள்ளவர்கள் விவரங்கள் பின்வருமாறு:
நாடுகள் | பதிவுசெய்த தமிழர்கள் | நாடு திரும்பிய தமிழர்கள் |
பஹ்ரைன் | 3700 | 2100 |
ஈராக் | 739 | 739 |
ஓமன் | 9578 | 7100 |
கத்தார் | 13,366 | 7300 |
சவுதி அரேபியா | 14,000 | 6500 |
யுஏஇ | 66,267 | 25,572 |
மலேசியா | 4679 | 4679 |
சிங்கப்பூர் | 11,114 | 4000 |
பிலிப்பைன்ஸ் | 10,830 | 8011 |
ஜப்பான் | 558 | 382 |
கொரியா | 46 | 46 |
தாய்லாந்து | 436 | 196 |
மொத்தம் | 1,35,313 | 66,625 |
இதில் வளைகுடா நாடுகளில் இருந்து ஏராளமான இந்தியர்கள் தாயகம் வந்தனர். 84 ஆயிரத்து 497 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்துள்ளனர். ஓமனிலிருந்து 50ஆயிரத்து 536 பேரும், சவுதி அரேபியாவிலிருந்து 49 ஆயிரம் பேரும், குவைத்திலிருந்து 44,248 பேரும், கத்தாரிலிருந்து 30,509 பேரும், பஹ்ரைனிலிருந்து 14,920 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் பணிக்கு வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்கு தேவையான விமான வசதிகளை அரசு செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு உதவுவதற்காக, ஸ்வதேஷ் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வந்தே பாரத் மிஷனின் கீழ் இயக்கப்படும் / இயக்கப்போகும் மொத்த விமானங்கள்
முதல் கட்டம் | 84 |
இரண்டாம் கட்டம் | 260 |
இரண்டாம் கட்டம் (கூடுதலாக) | 186 |
இரண்டாம் கட்டம் (கூடுதலாக) | 131 |
மூன்றாம் கட்டம் | 587 |
நான்காம் கட்டம் | 1082 |
ஐந்தாம் கட்டம் | 1104 |
ஆறாம் கட்டம் | 1620 (செப் 16, 2020) |
(தரவு உதவி: வெளியுறவுத் துறை அமைச்சகம்) |
இந்தத் திட்டத்தின் கீழ் தாயகம் வந்த இந்தியர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற முடியும். இந்த இணையதளம் ஜூலை 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் தாயகம் திரும்பிய இந்தியர்கள் குறித்து அவர்கள் சார்ந்திருக்கும் மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள கோரிக்கைகள் | நாடு திரும்பிய பயணிகள் | கிடைக்கப்பெற்ற கோரிக்கைப் பதிவுகள் | |
இந்தியா | 2,24,116 | 2,63,187 | 4,87,303 |
தமிழ்நாடு | 27,541 | 17,701 | 45,242 |
**ஜூன் 24, 2020 வெளியுறவுத் துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்பித்த தரவுகளின் படி |
இந்த 13 லட்சம் பேர் இந்தியா வந்ததில், விமானம் மூலம் 11,89,077 பேரும், நில எல்லை வழியாக 1,28,165 பேரும், கடல்வழியாக 3,987 பேரும் வந்தே பாரத் மிஷன் மூலம் வந்துள்ளனர். வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் 85,348 தமிழர்கள் வந்துள்ளனர் என்ற தகவல்களை வெளியிடப்பட்டுள்ளன.