உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி முன்னாள் துணை பிரதமர் எல் கே அத்வானி, பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ராம் கோயில் இயக்கத்தில், 'கர் சேவகர்களால்' இடிக்கப்பட்டது.
இந்த மசூதி இருந்த இடத்தில் பண்டைய ராமர் கோயில் இருந்ததாக அவர்கள் கூறினர். இதையடுத்து, பல வருடங்களாக நீடித்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு(2019) நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி, இந்த இடம் ராமர் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், புதிய மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், ராமர் கோயில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் அறக்கட்டளை நிறுவவும் உத்தரவிட்டது. பின்னர், காசியில் உள்ள ஜங்கம்வாடி மடத்தில் நடைபெற்ற ஜகத்குரு விஸ்வரத்யா குருக்களின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மோடி, ராமஜென்ம பூமி தீர்த்த சேஷ்த்ரா தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டு, ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளில் வளர்ச்சி ஏற்பட்டது. வரும் ஐந்தாம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ள நிலையில், கோயில் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலம் ராமஜென்ம பூமி தீர்த்த சேஷ்த்ராவிடம் அளிக்கப்பட்டது.
இந்தப் பூமி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டவுள்ளதாகத் தெரிகிறது. இதனால்,அங்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், சுமார் 200 பேர் பங்கேற்பார்கள் எனவும், அவர்கள் அனைவரும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.