மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நக்சல்களின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்த நிலையில், பாதுகாப்பு படையின் கடும் நடவடிக்கையால் அவர்களின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. இதற்கிடையே, சத்தீஸ்கரில், கடந்த 30 நாட்களில், நக்சல் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 6 நக்சல்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து, அப்பாவி பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோரும் நக்சல்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 60 நாட்களில் மட்டும், வனத்துறை அலுவலர், பஞ்சாயத்துத் தலைவர் உட்பட அப்பாவி கிராம மக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கவலை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா யுகே, மாநில உள் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து, உள்துறை அமைச்சக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பாஸ்தர் காவல் துறை இயக்குனர் சுந்தர்ராஜ் கூறுகையில், "நக்சல் பிரிவினருக்கிடையே மோதல் நடப்பது முதல் முறை அல்ல கடந்த காலத்திலும் நடந்துள்ளது. இந்த மோதலில் நக்சல் பேச்சாளர் விஜ்ஜா, கமலு, பூனம், சந்திப், சந்தோஷ் ஹேம்லா, தசமி மன்தாவி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நக்சல்களின் கோட்டையாக இருந்த பாஸ்தரில், அவர்களுடைய தாக்கம் குறைந்து வருகிறது. பல நக்சல்கள் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். இதனால் கலக்கம் அடையும் நக்சல்கள் தங்களைத் தானே தாக்கி கொள்கின்றனர்" என்றார். காங்கிரஸ் ஆட்சியில்தான் நக்சல்களின் தாக்குதல் அதிகம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கவுசிக் குற்றம்சாட்டியுள்ளார்.