கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரிதலா பகுதியில் கிருஷ்ணன் என்பவர் எழுது பொருள் கடை நடத்தி வந்துள்ளார். இக்கடைக்கு காகிதம், பேனா, பென்சில் போன்ற பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளுக்கு, கடை உரிமையாளர் பாலியல் ரீதியில் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதன்பின், திரிதலா காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த கிருஷ்ணன், தலைமறைவானார். இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கடைக்கு வரும் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதும், இதுவரை 59 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில் பெற்றோர்கள் அளித்த புகார், சிறுமிகள் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில், கிருஷ்ணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.