டெல்லியில் உள்ள பாபு ஜகஜீவன் ராம் மருத்துவமனையின் 57 ஊழியர்களுக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் மருத்துவர்கள், செவிலியர், பிற சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்.
ஏப்ரல் 25 வரை, மருத்துவமனையின் 29 ஊழியர்கள் கரோனா நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது இப்போது 57 ஆக உயர்ந்துள்ளது. சில ஊழியர்களின் அறிக்கை இன்னும் வரவில்லை. இந்த மருத்துவமனை டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் அமைந்துள்ளது.
விக்டோரியா மருத்துவமனையில் கரோனா பாதித்த நபர் தற்கொலை
முன்னதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள் துறை அமைச்சகம் அதன் வழிகாட்டுதல்களில் பரிந்துரைத்ததைத் தாண்டி டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்று கூறினார்.
மேலும் நகரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுகளைக் குறைப்பதில் தனது அரசாங்கத்தின் கவனம் உள்ளது என்றும் கூறினார். ஆன்லைன் ஊடக சந்திப்பில் உரையாற்றிய முதலமைச்சர், “நாங்கள் கடினமான காலங்களை கடந்துவருகிறோம். டெல்லியில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாம் தொடர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு காலத்தில் கடைகளைத் திறப்பதற்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை தனது அரசாங்கம் செயல்படுத்திவருவதாக அவர் கூறினார். நாட்டின் தலைநகரில் எந்தச் சந்தைகளும் மால்களும் திறக்க அனுமதிக்கப்படாது. மேலும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் கேரள மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
பிளாஸ்மா சிகிச்சையிலிருந்து நேர்மறையான அறிகுறி வெளிவந்துள்ளது என்று கெஜ்ரிவால் கூறினார். பிளாஸ்மா சிகிச்சையைத் தொடர்ந்து எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் ஒரு முக்கியமான நோயாளியின் நிலை மேம்படுவதை கெஜ்ரிவால் மேற்கோள்காட்டினார். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் தாங்களாக முன்வந்து அவர்களின் பிளாஸ்மாவை தானம் செய்யுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.