குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததன் மூலம் அது சட்டமாகியுள்ளது. இந்நிலையில், மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "எந்தச் சூழ்நிலையிலும் குடியுரிமை சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்த மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், "மதச்சார்பற்ற கொள்கையின் மீது குடியுரிமை சட்டம் தாக்குதல் நடத்துகிறது. அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளை மீறுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை" எனக் கூறியுள்ளார்.
அரசியலமைப்புக்கு எதிரான சட்டத்திற்கு கேரளாவில் இடமில்லை, அதனை செயல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோரும் சட்டத்தை கடுமையாக விமர்சித்து தங்கள் மாநிலங்களில் அச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் சிறார்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படவில்லை - உச்ச நீதிமன்றம்