ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. இவர், தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்துவருகிறார். இவரின் ஆட்சிக் காலத்தில் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறார். இதற்கிடையில் நேற்று அரசு அலுவலர்கள் நான்கு பேருக்கு அதிரடியாக கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தங்களது பெயரிலும் பினாமியாக தங்களது உறவினர்கள் பெயரிலும் இவர்கள் சொத்துகள், பணம் குவித்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் அரசின் வெவ்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணிபுரிந்தவர்கள்.
ஒருவர் ஒடிசா கலால் துறையிலும் மற்றொருவர் மாநில போக்குவரத்துத் துறையிலும் பணியாற்றியவர்கள். மற்ற இருவர் முறையே வனத்துறை, உணவுப்பொருள்கள் பொதுவழங்கல் துறைகளில் பணியாற்றியவர்கள்.
ஊழல்புரிந்த நான்கு பேர் மீது நடவடிக்கை எடுத்தது போல், ஊழல் பெருச்சாளிகள் மீதான நடவடிக்கைத் தொடரும் என மாநில அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.