கர்நாடகா மாநிலம் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி என்பவரின் உறவினர் நவீன், இவர் இஸ்லாம் மதத்துக்கு எதிராகவும், நபிகள் குறித்து அவதூறாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதிவந்ததாக அறிய முடிகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை இஸ்லாமிய அமைப்பினர் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதியன்று கடுமையான வார்த்தைகளில் அவரது முகநூலில் பதிவொன்று வெளியிடப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய அமைப்பின் ஒரு பிரிவினர், துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று நவீன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். இதனிடையே, இஸ்லாமிய அமைப்பின் மற்றொரு பிரிவினர் டிஜே ஹள்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் இது வன்முறையாக மாறியது. எம்.எல்.ஏ வீடு, காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். வன்முறையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை கடந்த 14ஆம் தேதியன்று பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், டி.ஜே ஹள்ளி மற்றும் கே.ஜி. ஹள்ளி ஆகிய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 30 பேரை நேற்றிரவு (ஆகஸ்ட் 20) காவல்துறையினர் கைது செயதுள்ளனர்.
தனிப்படை காவலர்களால் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் முழுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
கைது செய்யப்பட்ட இந்த 30 பேரும் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டை சூறையாடியதாக நம்பப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் அனைவருத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.