நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதுவரை 3 லட்சத்து 83 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் கரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தானே மாவட்டத்தில் 87 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் ஏற்பட்ட கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக துணை முதலமைச்சர் அஜித் பவார், சுகாதார துறை அலுவலர்களுடனும், மூத்த ஆலோசகர்களிடமும் கலந்துரையாடி மூன்று பெரிய மருத்துவமனைகளை உடனடியாக அமைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, 800 படுக்கைகளுடன் அமைப்படவுள்ள முதல் மருத்துவமனை புனே பாலேவாடி விளையாட்டு வளாகத்திலும், மீதமுள்ள இரண்டு மருத்துவமனைகளின் இடம் தேர்ந்தேடுக்கும் பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து புனே டிவிஷனல் ஆணையர் தீபக் மைசேகர் கூறுகையில், " கரோனா பாதிப்பு சங்கலியை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்போதைய சூழ்நிலையில், விரைவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கை வசதி கிடைப்பதற்காக அதிகமான பராமரிப்பு மையங்கள் உருவாக்க வேண்டும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ள மூன்று மருத்துவமனைகளில் 200 ஐசியூ படுக்கைகளும், 600 ஆக்ஸிஜன் படுக்கைகளும் இருக்கும். தற்போது, புனேவில் வெறும் 24,000 படுக்கைகளும், 3,500 ஆக்ஸிஜன் வென்டிலேட்டர்கள் வசதிகள் கொண்ட படுக்கைகளும் உள்ளன" எனத் தெரிவித்தார்.