டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாதம் இஸ்லாமிய மதக் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் கரோனா தொற்று பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தெலங்கானாவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் முப்பது உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்கள் டெல்லி நிஜாமுதீன் மதக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய பிறகு கரோனா தொற்று சிகிச்சை பெற்றுவந்தவர்கள் ஆவார்கள்.
இதனால் மாநிலத்தில் உயிரிழப்பு ஒன்பது ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று தெலுங்கானா அரசு சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்த அலுவலர்களின் குழுவை அமைத்தது.
இதையடுத்து ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இந்திய அரசு விதித்துள்ள இயக்க நடைமுறைப்படி இறந்த உடல்களை அகற்றுவதை உறுதி செய்ய எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் காவல்துறை இயக்குநர், சிறப்பு தலைமைச் செயலாளர், சுகாதார மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் குழுவுக்கு ஹைதராபாத் மாநகராட்சி கழக மண்டல ஆணையர் என். ரவி கிரண் தலைமை வகித்து, கரோனா தொற்று நோயாளிகளின் உடல்களை அகற்றும் பணியை கவனிப்பார்.
இந்த குழுவில் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உஸ்மானியா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர்.
தெலங்கானாவில் முன்னதாக உயிரிழந்த ஆறு பேரும் டெல்லி இஸ்லாமிய மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்