சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 132 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபதியாக இந்தியா முழவதும் உள்ள முக்கியமான 21 விமான நிலையங்களில் கரோனா வைரஸ் தொற்று குறித்து பயணிகளைக் கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொச்சி, பெங்களூரு, அகமதாபாத், அமிர்தசரஸ், கொல்கத்தா, கோயம்புத்தூர், கவுகாத்தி, கயா, பாக்டோகிரா, ஜெய்ப்பூர், லக்னோ, சென்னை, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, வாரணாசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 21 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், நேபாளத்தின் எல்லையில் உள்ள மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலர்களுடன், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சிறப்புச் செயலர் சஞ்சீவ் குமார், கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதில், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை செயலர்கள், மத்திய சுகாதாரத் துறை செயலருடன் காணொலி காட்சி மூலம் தங்கள் மாநிலங்களில் தொற்றுநோயைக் கையாள்வதில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். வைரஸ் குறித்த அறிகுறிகளைப் பற்றி பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கரோனா பாதிப்பு குறித்து மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சுகாதாரத் துறை அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்’