மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, பால்கர், தானே, ரெய்காட், நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்து-வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மும்பை நகரில் நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் ரயில் சேவைகள் ஒரு சில இடங்களில் இன்று காலை மீண்டும் தொடங்கின. ஒருவார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவரும் மும்பை மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் மும்பை நகரில் 399.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது, 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை ரத்து, தாமதம் காரணமாக பயணிகள் முடங்கியுள்ளனர். விமான நிலைய வளாகத்திலேயே பெரும்பாலாக பயணிகள் காத்திருக்கின்றனர்.