கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கருப்புப்பணம் ஊடுருவலைத் தடுப்பதற்காக ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்தது.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை கடத்தல்காரர்களிடம் காவல் துறையினர் அவ்வப்போது பறிமுதல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம், நவ்ஸாரி பகுதியில் உள்ள பில்லிமோரா கிராமத்தில் தடைசெய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதையறிந்த குற்றப்பிரிவு காவல் துறையினர் அந்தப்பகுதிக்கு சென்று ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரிக்கும் உள்ளுர் குற்றப்பிரிவு அதிகாரி சைலேஷ்கிரி கோஸ்சுவாமி கூறுகையில், 'நாங்கள் நான்கு நபர்களை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ரூ.3.5 கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தெரிவித்தார்.
மேலும், கைப்பற்றிய பணத்தில் 13 ஆயிரத்து 432 பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 43 ஆயிரத்து 300 பழைய ஐந்நுாறு ரூபாய் நோட்டுகளும் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குற்றப்பிரிவு காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.