மகாராஷ்டிரா மாநில ரிசர்வ் படையில் பணிபுரிந்துவரும் இரண்டு காவலர்கள் அவர்களின் உயர் காவல் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் ஹாட்ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அவர்களின் சொந்த ஊருக்குச் சென்று வந்ததால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறை தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறுகையில், ”சட்டம் ஒழுங்கை பாதுகாப்பு பணிக்காக நாசிக்கில் உள்ள மாலேகான் பகுதிக்கு இரு காவலர்களும் அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் உயர் காவல் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள அவர்களின் சொந்த ஊரான ஜால்னாவுக்கு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சென்று வந்துள்ளனர்.
மாநில ரிசர்வ் படை ஆய்வாளர் விலாஸ் ஜக்தாப் கொடுத்த புகாரின்பேரில் இரண்டு காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் இரு காவலர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்” என்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 ஆயிரத்து 974 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 301 பேர் குணமடைந்துள்ளனர். 694 கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் : ஊக்குவித்த காவல் கண்காணிப்பாளர்