தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கிழக்கு மண்டலப் பகுதியில், காவல் ஆணையர் தலைமையில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வெள்ளை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் டிசையர் வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் 200 கிலோ தடைசெய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட ஷேக் அரிஃப், ஷேக் சமீர் இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து செல்லிடப்பேசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அரிஃப், அதிகளவில் வருமானம் ஈட்ட வேண்டும் என தனது உறவினரான அஷ்வக் உடன் சேர்ந்து, குறைந்த செலவில் கஞ்சாவை கொள்முதல் செய்து அதிக லாபம் வைத்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்ததாகவும், இதற்காக இருவரும் ஸ்ரீகாந்த் என்பவரிடம் கஞ்சா வழங்கும்படி கேட்டுள்ளதாகவும், இதையடுத்து இருவரும் சமீரைத் தொடர்புகொண்டு கஞ்சாவை வாகனத்தின் மூலம் கடத்த உதவினால் நல்ல தரகு தருவதாகக் கூறியதாகவும் காவல் துறையினர் கூறினர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், 'அரிஃப், அஷ்வாக் மாருதி சுஷ்கியில் திருட்டுத்தனமாக தடை செய்யப்பட்ட கஞ்சாவை கடத்த முடிவு செய்தனர். இதில் அரிஃப், சமீர் ஆகிய இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள முகமையில் இருந்த ஸ்ரீகாந்த் என்பவரைத் தொடர்புகொண்டு ஒரு கிலோ கஞ்சாவை ரூ.1,500க்கு வாங்கியுள்ளனர்.
இதையடுத்து நேற்று சாத்ரினகா பகுதியில் உள்ள அரிஃப்-இன் உடைய குடியிருப்பில் இருந்து இருவரும் கஞ்சாவை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் சாத்ரினகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது' எனத் தெரிவித்தனர்.
மேலும், தலைமறைவாகி உள்ள அஷ்வக், ஸ்ரீகாந்த் இருவரையும் வலைவீசி தேடிவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.