கடந்த மாதம் டெல்லியில் நடந்த சமய மாநாட்டில் கலந்துகொண்ட உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தையடுத்து நர்கடி கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், கடந்த 13ஆம் டெல்லியிலிருந்து தங்களது சொந்த கிராமத்திற்குத் திரும்பியதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துறையினர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்புக்குழு இவர்களைக் கண்டறிந்து அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தியது. தனிமைப்படுத்தப்பட்ட ஒன்பது பேர்களில் ஆறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர்களைத் தனிமைப்படுத்திய சிறப்புக்குழுவில் இடம்பெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் காவலர் இவர் ஆவார். இவரது குடும்பம் படான் மாவட்டத்தில் வசித்துவரும் நிலையில் இவர் பிஜ்னோர் மாவட்டத்தில் தனிமையாக வாழ்ந்துவருகிறார்.
இதையடுத்து அவருடன் பணியாற்றிய 45 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர் பணிபுரியும் நஹ்தூர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அதேசயம் இந்தச் சிறப்புக்குழுவில் இவருடன் இடம்பெற்றிருந்த மூன்று காவலர், மருத்துவப் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பிஜ்னோர் மாவட்டத்தில் இதுவரை நான்கு பெண்கள் உள்பட 23 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் மாவட்டத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 15 பகுதிகள் சீல்வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரமலான்போது வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள் - தப்லிக் ஜமாஅத் தலைவர்