இந்தியாவில் கரோனா வைரசின் பிறப்பிடமாகக் கேரளா இருந்தாலும், அம்மாநிலத்தின் தொடர் நடவடிக்கைகளால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்துவருகின்றன. இந்த வைரசைக் கட்டுப்படுத்த கேரளா அரசு கடைப்பிடிக்கும் மருத்துவ வழிமுறைகள் பலராலும் பாராட்டப்பட்டுவருகின்றன.
இதனிடையே, கேரளாவில் ஆரம்பக்கட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி ஒருவரும் அடங்குவார். சர்க்கரை நோயாளியான இவருக்கு இத்தாலியிலிருந்து வந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததால் கரோனா தொற்று பரவியது.
இதையடுத்து, இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 45 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு 19 முறை கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அனைத்து முறையுமே அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்தது.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அரசின் நெறிமுறைகளின்படி முதல் பரிசோதனை மட்டுமின்றி, இரண்டாவது பரிசோதனையிலும் கரோனா தொற்று இல்லை என முடிவு வந்தால் மட்டுமே அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனப் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் அந்த மூதாட்டியின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், சர்க்கரை நோயைத் தவிர அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இதுவரை கேரளாவில் 438 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 323 பேர் குணமடைந்துள்ளனர். மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 தொற்றை சம்மாளிப்பது எப்படி? கேரளாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என்னென்ன? - நிபுணர்