இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 13,387 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 437 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் இத்தொற்றின் தாக்கம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஸ்வர்கேட் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி, இருசக்கர வாகனத்தில் சென்ற 180 பேரையும் காவல் துறை ஆய்வாளர் ஷபிர் சையித் மடக்கிப்பிடித்துள்ளார். இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறியதற்கு தண்டணை வழங்கும் விதமாக அவர், 180 பேரையும் நடுரோட்டில் நான்கு மணிநேரமாக உட்கார வைத்துள்ளார்.
விதிகளை மீறியவர்கள் மீது 50 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை ஆய்வாளர் கூறுகையில், "புனேவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த 180 பேரும் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றனர். இதனால் ஏற்படும் ஆபத்தை உணர வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது" என்றார். மகாராஷ்டிராவில் இதுவரை கரோனா வைரஸால் 3,205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 197 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கரோனா!