தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டாவைச் சேர்ந்த நரசிம்மா என்பவரது மகள் ரம்யா. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், ஹைதராபாத்தில் தனியார் ஒன்றில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரம்யாவுக்கு ரச்சகொண்டா நகர காவல் ஆணையராக வேண்டும் என்ற லட்சியக் கனவு இருந்துள்ளது. இதையறிந்த ஒரு தனியார் அமைப்பு, ரச்சகொண்டா நகர காவல் ஆணையர் மகேஷ் பகவத் ஐபிஎஸ்-இடம் தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவர் ரம்யாவை ரச்சகொண்டா காவல் ஆணையராக ஒரு நாள் பணியாற்ற வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரம்யா, 'ரச்சகொண்டா காவல் ஆணையராக பதவியேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஒருநாள் காவல் ஆணையரான நான், ரச்சகொண்டா பகுதியில் ஏற்படும் குற்றங்களைத் தடுப்பேன், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவந்து பெண்கள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பேன்' என்று தெரிவித்தார்.
ரச்சகொண்டா காவல்துறை, ஒருநாள் காவல் ஆணையர் என்ற ஆசையை நிறைவேற்றியது இது இரண்டாவது முறையாகும். 2017ஆம் ஆண்டு ஏசான் என்ற சிறுவனை ஒரு நாள் காவல் ஆணையராக்கி அவனது ஆசையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 3டி ஆர்ட்டிஸ்ட் ஒடியத்தின் கண்கவரும் ஓவியங்களின் தொகுப்பு