கரோனா வைரஸ் கோவிட்-19 ஏற்படுத்திய சுகாதாரம், பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலுள்ள இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாய்நாடு திரும்பிவருகின்றனர். அந்த வகையில் இதுவரை இரண்டு விமானங்கள் வாயிலாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய தொழிலாளர்கள் கேரளா திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவது விமானம் 153 இந்திய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தது. சவுதி அரேபியாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், நேற்றிரவு 8.05 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தது. நாடு திரும்பிய 153 தொழிலாளர்களில் 10 பேர் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த விமானத்தில் 89 கர்ப்பிணி பெண்களும், 22 குழந்தைகளும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மூன்று பேரும் இருந்தனர். முன்னதாக வியாழக்கிழமை, துபாயிலிருந்து 182 பயணிகளுடன் ஒரு விமானம் கேரளாவில் தரையிறங்கியது.
இதற்கிடையில் இன்று இரவு பஹ்ரைனிலிருந்து நான்காவது விமானம் கேரளாவில் தரையிறங்குகிறது. பயணிகளின் உடைமைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும், மேலும் கோவிட்-19 அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'செலவைக் குறைப்பது தவறான யோசனை' - கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்