மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டில், பாஜக எப்போதும் பதவிக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இருப்பதாக கூறினார்.
இன்று அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டில், ”பதினான்கு முதல் பதினைந்து பாஜக எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். நாங்கள் அவர்களுடன் நல்ல உறவில் இருக்கிறோம். அவர்களின் மனநிலையை புரிந்து வைத்துள்ளோம். ஆனால் அதற்காக நாங்கள் அவர்களை எங்கள் பக்கம் இழுக்க நினைக்கவில்லை.
அதுபோன்று குதிரைபேரத்தில் ஈடுபடும் தவறை செய்ய வேண்டும் என்பது எங்கள் எண்ணமும் இல்லை. அரசின் ஆட்சியை நிலையாக வைத்துக் கொள்வதிலேயே நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பாஜக மிகப்பெரிய கட்சியாக மகாராஷ்டிராவில் உருவெடுத்தது. இருப்பினும் அக்கட்சியினர் சிவசேனாவுடன் முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்ள விரும்பாததால் ஆட்சியமைக்க தவறிவிட்டனர் என்று கூறினார்.
இதே வேளையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டவில்லை என்று பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.