தெற்கு அசாமில் கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குறைந்தது 13 குரங்குகள் இறந்து கிடந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் பொது சுகாதார பொறியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு குரங்குகள் உயிரிழந்து கிடந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து வனத்துறை அலுவலர்கள் உடனடியாக குரங்கின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து கால்நடை துறை அலுவலர் ரூபல் தாஸ் கூறுகையில், "குரங்குகளின் உடற்கூறாய்வு பரிசோதனையில் உடல்களில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதை உறுதிப்படுத்த, இறந்த குரங்குகளின் மாதிரிகளை கானாபராவில் உள்ள கால்நடைத் துறையின் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.