இந்தியாவில் கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் பிற நாடுகளுக்குச் சென்றிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்தனர்.
இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு மும்முரம் காட்டிவருகிறது. அதன் ஒருகட்டமாக, பஹ்ரைனில் சிக்கித்தவித்த 127 இந்தியர்கள் சிறப்பு கல்ஃப் ஏர் விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அதன் பிறகு அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலிருந்து கேரளா அரசின் சிறப்பு பேருந்துகள் மூலம் கொச்சி கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு உள்ள பள்ளி ஒன்றில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
பயணிகளை தனிமைப்படுத்த இங்கு 200 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி விடுமுறை முடிந்து பணியில் சேரும் கடற்படை வீரர்களும் அதே இடத்தில்தான் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த முகாமை பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நிர்வகித்து வருவதாக தெற்கு கடற்படை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா பரிசோதனை வாகனமாக காரை மாற்றிய கேரளா துணை ஆட்சியர்!