ஜார்க்கண்ட் : டும்கா மாவட்டத்தில் 12 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து டியூஷனுக்குச் சென்ற அந்த மாணவியின் உடல் சிதி என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்தாலும், அது சிறுமியின் உடற்கூராய்வின் முடிவிலே உறுதியானது என டும்கா மாவட்ட எஸ்பி அம்பர் லக்ரா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக கிடைக்கும் தகவல்களை தனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் ஹேமந்த் சோரன், அம்மாநில காவல் துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்டில் எதிர்கட்சியாக உள்ள பாஜக, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. வருகிற நவம்பர் 3ஆம் தேதி டும்கா, பெர்மோ தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு வலைவீச்சு